திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி
கஞ்சா ஒழிப்பு மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் பேசிய போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை இணைந்து கஞ்சா ஒழிப்பு மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பவானி கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் பேசுகையில், ஒருவர் தவறு செய்துவிட்டால் சமுதாயம் மற்றும் காவல்துறையின் பார்வையில் குற்றவாளி தான். ஒரு முறை குற்றவாளியாகி விட்டால் இந்த சமுதாயம் உங்களை குற்றவாளியாகத் தான் பார்க்கும். இது சமுதாயத்தின் தவறோ, காவல் துறையினரின் தவறோ அல்ல. எனவே இந்த சமுதாயத்தை காக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது.
அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையினர் தான் காரணம். அவர்கள் இல்லாமல் அரசாங்கமும் இயங்காது. ஒவ்வொரு போலீசும் யூனிபார்ம் அணிந்த குடிமகன். ஒவ்வொரு குடிமகனும் காக்கிச்சட்டை போடாத போலீசாக இருக்க வேண்டும் என்று திரைப்பட வசனத்தை மேற்கொள் காட்டி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், பவானி கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி மற்றும் நீதிபதிகள் பேசினர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் போதை பொருள் விற்று கைதாகி தற்போது வழக்குகளை சந்தித்து வரும் நபர்களில் ஒருவரை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன், பேச அழைத்தார். அப்போது, ஐயப்பன் என்பவர் போலீசார் தங்கள் மீது பொய் வழக்கு போட வேண்டாம் என்று கூறினார். இதனை பலரும் கைதட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் கூறும்போது, நான் செய்த தவறால் என் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறேன். தற்போது எந்தவொரு உதவியும் குடும்பத்திடம் இருந்து கிடைப்பதில்லை. தொழில் செய்ய விரும்பும் எனக்கு எனது தந்தையே உதவி செய்ய மறுக்கிறார். என்னை குடும்பத்தினர் வெறுத்து தனியாக ஒதுக்கி விட்டனர். எனவே முடிந்தவரை தவறை திருத்தி மற்றவர்களையும் தவறு செய்யாமல் திருத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜரண வீரன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சண்முகம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, காவல் உதவி ஆய்வாளர்கள் தனபால், அமுதா, பிற காவல் ஆய்வாளர்கள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu