ஈரோடு மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்..!

ஈரோடு மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்..!
X

சிறப்பு முகாம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் வைட்டமின் ஏ திரவம் வழங்குதல் மற்றும் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் வைட்டமின் ஏ திரவம் வழங்குதல் மற்றும் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நேற்று (1ம் தேதி) தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை (புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுகாதார மையங்களில் நடத்தப்பட உள்ளது.

இம்முகாம்களின் நோக்கம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதாகும். இவ்விரு முகாம்களும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 1,28,473 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஜிங்க் மாத்திரைகள், ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் வழங்கப்பட்டு தயாரிக்கும் முறையும், பயன்பாடுகளும் எடுத்துக் கூறப்பட உள்ளது. அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் வயிற்றுப்போக்கு தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு, ஓஆர்எஸ் மற்றும் ஜிங்க் முகப்பு விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமாக எடுத்து கூறப்பட உள்ளது.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், கைகழுவும் முறைகள் குறித்து விளக்கமாக விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கப்பட உள்ளது. வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மூலம் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் துணை சுகாதார மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் எடை கண்டறிந்து எடை குறைவான குழந்தைகளை உயர் சிகிச்சைக்காக சிறப்பு மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

ஆகவே, ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மற்றும் இருமாத கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு போதிய விழிப்புணர்வுகளைப் பெற்று தங்களின் குழந்தைகளை பாதுகாத்திடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story