உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி; திமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி - தமாகா யுவராஜா கருத்து!
Erode news- ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா.
Erode news, Erode news today- உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதில் திமுக மூத்த நிர்வாகி அதிருப்தியில் உள்ளனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஈரோடு கிருஷ்ணாம்பாளையம் காலனியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.யுவராஜா முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். பொதுமக்களுக்கு மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் மாயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தமிழகத்தில் பழனி, ஸ்ரீரங்கம், தஞ்சை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வழங்கப்படும் லட்டு, பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் தரமாக உள்ளதா? என்று பக்தர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, கோயில்களுக்கென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு செந்தில்பாலாஜி அமைச்சராக நியமிக்கப்பட்டது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஜனநாயக ரீதியாக அவர் அமைச்சராக பொறுப்பேற்பது சரியா? அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றால் நியாயமான விசாரணை நடக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது.
துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதில் எந்த குறையும் கிடையாது. ஆனால் இந்த முடிவு வருகிற தேர்தலில் பிரதிபலிக்கும். தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என்.நேரு போன்றவர்களே அதிருப்தியில் உள்ளனர். எனவே பொதுமக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu