ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் ஆக்கிரமித்திருந்த ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்
ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோயில் இன்று (18ம் தேதி) இடித்து அகற்றப்பட்டன.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து அளவீடு செய்து சுமார் 2004 சதுர அடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவற்றை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதை அடுத்து உரிய விசாரணைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் கோயில் மற்றும் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமானங்களை நேற்று அகற்றுவதாக அறிவித்தனர்.
அப்போது, கோயில் தரப்பினரும் ஆட்டோ நிறுத்தம் தரப்பினரும் மற்றும் தாசில்தார் ஆகியோருடன் ஈரோடு ஆர்.டி.ஓ. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவின் படி குறிப்பிட்ட அளவுள்ள இடம் அளவீடு செய்து காண்பிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று (18ம் தேதி) காலை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தினர், மாநகர பொறியாளர் விஜயகுமார், உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து போலீசார், தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படையினர் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.
சுமார் 15 ஆண்டுகளாக இருந்த கள்ளுக்கடை ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதேபோல், கோயில் அருகே இருந்த ஆட்டோ நிறுத்த பகுதி கட்டிடங்களும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu