ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக மனு
தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த தேர்தல் ஆணையம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்
தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. கிழக்கு தொகுதியில் எந்த வீதிகளில் சென்றாலும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கில் அதிக அளவில் பணப்பட்டுவடா உள்ளிட்ட விதி மீறல்கள் நடப்பதாக கூறி தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் சத்யபிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி புகார் மனுக்கள் எதுவும் நடைபெறவில்லை என்று அண்மையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருந்தார். இந்த நிலையில், தேமுதிக மனு அளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu