கோபி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பிரசவமான பெண் உயிரிழப்பு
சாலை மறியலில் ஈடுபட்ட மைதிலியின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம். உள்படம்:- மைதிலி.
கோபி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் பிரசவமான பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சுண்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி மைதிலி (வயது 28). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மைதிலி இரண்டாவதாக கர்ப்பமானார். கடந்த 20ம் தேதி மைதிலி பிரசவத்திற்கான கோபியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மைதிலிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், மைதிலிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே, மைதிலிக்கு பிரசவத்திற்காக நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது அளவுக்கதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக கோபி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மைதிலியை கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைதிலி எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி நேற்று (28ம் தேதி) மதியம் உயிரிழந்தார்.
இதனையடுத்து, மைதிலியின் இறப்பிற்கு கோபி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான மருத்துவ சிகிச்சையே காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, மைதிலியின் உறவினர்கள் கோபியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் வேட்டைக்காரன்கோவில் பகுதியில் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் குறித்த தகவலறிந்து கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயிரிழந்த மைதிலியின் பெண் குழந்தை கோபி அரசு மருத்துவமனையில் உள்ளது. ஆனால் குழந்தையின் முகத்தை பார்க்காமலே தாயை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்கள் எங்கள் யாரையும் சந்திக்க விடவில்லை. எனவே மைதிலியின் இறப்பில் சந்தேகம் உள்ளது. கோபி அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது என எங்களுக்கு தெரிய வேண்டும். அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனையடுத்து, இதுகுறித்து புகார் அளித்தால் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, மைதிலியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கோபி - திருப்பூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu