மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஜன.8ல் 5 இடங்களில் இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து வருகிற 8ம் தேதி 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நிர்வாகி பொன்னுசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் புயலாலும், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இவற்றை மத்திய ஆய்வுக் குழுவும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தது.
ஆனால், இதுவரை எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுக்கும் மக்களுக்கும் எதிராக பொறுப்பற்ற முறையில் ஊடகங்களில் பேட்டியளித்து இருப்பது கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரிய நிதியை வழங்க வலியுறுத்தியும் மாநில முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அறை கூவல் விடுத்துள்ளது.
இதன்பேரில், மழை வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். மாநில அரசு கோரியுள்ள ரூ.21 ஆயிரத்து 692 கோடி நிதியினை மத்திய அரசு முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 8ம் தேதி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று மாவட்ட குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கானம் ராஜேந்திரன், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் ரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் துளசிமணி, இடைக்கமிட்டி செயலாளர்கள் கல்யாணசுந்தரம் (ஈரோடு) , செந்தில்குமார் (பெருந்துறை) , ரணதிவேல் (கொடுமுடி), மாதேஸ்வரன் (மொடக்குறிச்சி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu