அந்தியூர் விற்பனை கூட்டத்தில் 24ம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம்
பருத்தி ஏலம் (பைல் படம்).
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் வரும் 24ம் தேதி முதல் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை துவங்குகிறது.
இதுகுறித்து அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு விற்பனைக்குழுவின் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வரும் ஜூன் 24ம் தேதி முதல் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை துவங்கி பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும் பருத்தி மறைமுக ஏல விற்பனை மூலம் நடைபெறவிருக்கிறது.
இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளுர் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பு ஆலை உரிமையாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுசமயம், விவசாயிகள் நன்கு முதிர்ந்த மலர்ந்த வெடித்த பருத்தியினை அதிகாலை நேரத்தில் பறித்து, நிழலில் உலர்த்தி, தூசு மற்றும் சருகுகளை நீக்கி, ரகம் வாரியாக தனித்தனியே பிரித்து விற்பனைக் கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதன் மூலம் தங்களது விளைப்பொருட்களுக்கு சரியான எடை, போட்டி விலை, உடனடிப் பணத்திற்கு, எவ்வித பிடித்தமும் இன்றி நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu