ஈரோட்டில் சிறு ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோருடன் ஆலோசனை
டெக்ஸ்டைல் பார்க் (பைல் படம்).
துணி நூல் துறை சார்பில், ஈரோட்டில் சிறு ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (இன்று) நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், துணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பாக தொழில் முனைவோருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் லதா (பொ) தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். அடிப்படை வசதிகள், பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் மற்றும் தொழிற்கூடங்கள் என தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது மானியமாக வழங்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகுவதோடு அதிக அளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து ஜவுளித் தொழில் முனைவோரும் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும். வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் முன்வர வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் லதா தெரிவித்தார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில், தொழில் முனைவோரின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்பட்டன. நடைபெற்ற கூட்டத்தில், இதில், துணி நூல் துறை சேலம் மண்டல துணை இயக்குநர் அம்சவேணி. மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிகண்டன், தொழில் முனைவோர்கள் மற்றும் துணிநூல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu