சத்தியமங்கலத்தில் 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு மாவட்டத்தில் விலங்குகளால் பயிர் சேதப்படுத்தப் படுவதை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து, வரும் 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் மலை கிராமம் தவிர 30 கி.மீ., தொலைவிற்கு, வன விலங்குகளால், குறிப்பாக காட்டுப் பன்றிகளால், விவசாயிகள் விளைவித்த பயிர்கள் சேதப்படுத்தப் படுவது தொடர்கதை யாக உள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தால் மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கேரள அரசு அம்மாநில விவசாயிகள் நலன் கருதி, காட்டுப் பன்றிகளை, வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது. அதேபோல், அதிமுக மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை, தமிழக வனத்துறை ஏற்கவில்லை.வ விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப் படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்காத, தமிழக அரசை கண்டித்தும், காட்டுப் பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தியும், வரும் 3ம் தேதி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஏ.பண்ணாரி முன்னிலையிலும் நடைபெறும். இதில் அதிமுகவினரும், பொதுமக்களும், விவசாயிகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu