தேர்தல் தொடர்பான புகார்களை சிவிஜில் செயலியில் தெரிவிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்

Erode news- சிவிஜில் செயலி.
Erode news, Erode news today- தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சிவிஜில் என்ற ஆப் மூலம் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட அனைத்துவிதமான புகார்களையும் எளிதாக பதிவு செய்யும் வகையில் பிரத்யேகமாக சிவிஜில் கைப்பேசிச் செயலியையும் மற்றும் இணையதளத்தினையும் (https://cvigil.eci.gov.in/) இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தேர்தல் சமயத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து புகார் அளிக்கவும், புகாரின் நிலையினை தெரிந்து கொள்ளவும் இக்கைப்பேசி செயலி உதவுகிறது. இக்கைப்பேசி செயலியினை பயன்படுத்தி 2 நிமிடம் வரையிலான வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இக்கைப்பேசி செயலியில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலமாக உடனடியாக அருகிலுள்ள பறக்கும் படை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100 நிமிடங்களில் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தேர்தல் பணிக்கென 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களை கொண்ட 1800 425 0424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
ஒரே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளை ஏற்கும் வகையில் இக்கட்டணமில்லா தொலைபேசியுடன் கூடுதலாக 4 துணை இணைப்புகள் 0424-2267672, 0424-2267674, 0424-2267675 மற்றும் 0424-2267679 வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான விவரங்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் தெரிந்து கொள்ளும் வகையில், இதற்காக தனியே ஏற்படுத்தப்பட்டுள்ள மாவட்ட தகவல் மையத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu