அந்தியூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்

அந்தியூர் ஒன்றியத்தில்  வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்
X

அந்தியூர் பர்கூர் ஊராட்சி மடம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (3ம் தேதி) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி தாமரைக்கரையில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9.86 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் திட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில் வனத்துறையின் சார்பில் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தாமரைக்கரை முதல் தேவர்மலை வரை சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தாமரைக்கரை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19.10 லட்சம் மதிப்பீட்டில் கொங்காடை முதல் ஒன்னக்கரை வரை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் கொங்காடை முதல் தம்முரெட்டி வரை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பெஜ்ஜில்பாளையத்தில் ரூ.46.87 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, பர்கூர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.49.74 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருவதையும், கொங்காடை பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கான வீடு கட்டப்பட்டு வருவதையும் என மொத்தம் ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஒசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு ஆகியவற்றினை கேட்டறிந்தார். முன்னதாக, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் செல்லம்பாளையம் பர்கூர் கொள்ளேகால் ரோடு வனத்துறை சோதனைச் சாவடி முதல் தாமரைக்கரை வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வுகளின்போது, அந்தியூர் வட்டாட்சியர், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!