வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள்: விவசாயிகளுக்கு ஈரோடு கலெக்டர் அழைப்பு

வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள்: விவசாயிகளுக்கு ஈரோடு கலெக்டர் அழைப்பு

கோப்பு படம்.

வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிக்க அதிக நேரமும் அதிக அளவில் வேலையாட்களும் தேவைப்படுகிறது. கால விரையத்தை தவிர்க்கவும் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் இன்றியமையாதாகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவதுடன், அரசு திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

அறுவடை காலங்களில் நெல் அறுவடை இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும்போது வாடகைத்தொகை உயர்ந்து விடுகிறது. இதனால் வேளாண் வருமானம் குறைவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வேளாண்மைப் பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரம் மூலம் விவசாயிகளின் தேவையை ஓரளவே தீர்க்க முடியும். மேலும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் விபரங்கள் விவசாயிகளுக்கு தெரிவதில்லை இதனால் விவசாயிகள் குறித்த காலத்தில் நெல் அறுவடை செய்ய தீர்வாக, தனியாருக்கு சொந்தமான நெல், மக்காசோளம், பயிறு தானிய வகைகள், அறுவடை செய்யும் இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், செல்போன் எண் போன்ற விபரங்கள் வட்டாரம், மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இதில் ஈரோடு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 15 சக்கரவகை அறுவடை இயந்திரங்களும், 5 டிரேக் வகை அறுவடை இயந்திரங்களும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை இயந்திர உரிமையாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தாங்களே வாடகை நிர்ணயம் செய்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story