ஈரோட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஆய்வு செய்தார் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி
ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (மார்ச்.13) திங்கட்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தினை கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு பேற்கொண்டார்.
பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் இன்று (மார்ச்.13) திங்கட்கிழமை தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 200 பள்ளிகளைச் சேர்ந்த 12,815 மாணவர்கள் ,13,359 மாணவியர்கள் என மொத்தம் 26,174 பேர் 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். நாளை (மார்ச்.14) செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வை 221 பள்ளிகளை சேர்ந்த 10,263 மாணவர்கள், 11,685 மாணவிகள் என மொத்தம் 21,948 பேர் 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்விற்காக 3 தனித் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 26 வழித்தடங்கள் மூலம், 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து வினாத்தாட்கள் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. இத்தேர்வுகள் சிறப்பாக நடைபெறும் பொருட்டு 105 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 110 துறை அலுவலர்கள் 1447 அறைக் கண்காணிப்பாளர்கள் 150 பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சொல்வதை எழுதுபவர் மற்றும் கூடுதல் நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் 412 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு (3 கண்பார்வை குறைபாடுள்ள மாணவர்கள்) அவர்களும் சிறப்பாக தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu