ஈரோடு தனியார் வேலை வாய்ப்பு முகாம்; பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்
ஈரோட்டில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (இன்று) வழங்கினார்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகளின் சார்பில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.
இதற்கு, ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு நிறுவன வேலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உடனடி ஆணைகளை வழங்கி பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 100 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 3 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் வேலைவாய்ப்பு முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில், 2500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்நது இரண்டாவது மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று (செப்.30) ஈரோடு, ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு பிரிவின் வாயிலாக தொழில்நெறி வழிகாட்டல், அனைத்து அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்குதல், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று வழங்குதல், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் மற்றும் பயிற்சி பிரிவின் மூலமாக மாணவர்களுக்கு குறுகியகால மற்றும் நீண்டகால பயிற்சி வழங்குதல் போன்ற இன்றியமையாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வேலை வாய்ப்பு முகாமில், ஈரோடு, கோவை, திருப்பூர், சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 125-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்முகாமில் சுமார் 5100க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், 9 திறன் பயிற்சி அளிப்பவர்களும், 35 மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை பெற்றுள்ளவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
தொடர்ந்து, தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் இலவச பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் 6 நபர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார். மேலும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டம் (DDU - GKY) ன் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கான சேர்க்கை ஆணையினை 5 நபர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராதிகா, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி, முதல்வர் சங்கர சுப்பிரமணியன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஜெயகுமார் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu