சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..!
வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளார்.
சித்தோட்டில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்றத் தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், அடுத்த நாளான 20ம் தேதி சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் நாளான வருகிற ஜூன் 4ம் தேதி அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இன்று (திங்கட்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். மேலும், 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிடம், வாகனம் நிறுத்துமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu