ஈரோடு மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூலை தொடங்கி வைத்த ஆட்சியர்
உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆட்சியரக அலுவலகத்தில் வியாழக்கிழமை (இன்று) தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியரால் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் பணி துவக்கி வைக்கப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை (இன்று) ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, பாரதத்தின் பரந்து விரிந்த எல்லைகளை பாதுகாத்து வருவதோடு, தீவிரவாதிகளின் பயங்கரவாதத்திலிருந்து தங்களுடைய இன்னுயிரை ஈந்து நாட்டையும், நாட்டு மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து அரும்பணியாற்றி வருபவர்கள் நமது முப்படைவீரர்கள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் முப்படையினரின் கொடிநாள் விழா கொண்டாடப்படுகிறது.
நமது முப்படைவீரர்களின் ஒப்பற்ற நிகரில்லா தியாகங்களுக்கும், கடமைகளுக்கும் நாம் காட்டுகின்ற நன்றி உணர்வின் பொருட்டாக கொடிநாள் கொண்டாடப்படுகிறது. நமது தாய் திருநாட்டினை அந்நியர்களிடமிருந்தும், இயற்கை சீற்றங்களின்போதும் கலங்காது நின்று கடமையாற்றி மக்களை காத்திடும் மாபெரும் தியாகச் செம்மல்களான நமது படைவீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
அந்த வகையில், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் தொகுப்பு நிதியிலிருந்து முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களின் குழந்தைகளுக்கு 55 நபர்களுக்கு ரூ.13 லட்சத்து 24 ஆயிரத்து 380 கல்வி நிதியுதவியும் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி, முன்னாள் படைவீரர்களின் விதவையர்களுக்கு வீட்டு வரிச்சலுகை, இரண்டாம் உலகப்போர் நிதியுதவி, மாதந்திர நிதியுதவி, மனவளர்ச்சி குன்றியோர் நிதயுதவி (முன்னாள் படைவீரர்களின் சிறார்கள்), புற்றுநோய் நிவாரண நிதியுதவி (விதவை), பக்கவாத நோய் நிவாரண நிதியுதவியாக (முன்னாள் படைவீரர்கள்) 239 நபர்களுக்கு ரூ.28.13 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதிவசூல் இலக்காக ரூ. 1 கோடியே 56 லட்சத்து 90 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரத்து 450 அதாவது 98.9 சதவீதம் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டை போல, இந்த வருடமும் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் எய்திட பொதுமக்கள், அரசு அலுவலா்கள், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் ஆகியோா் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்றார். முன்னதாக, சமூக ஆர்வலர் லோகநாதன் கொடிநாள் வசூல் உண்டியலினை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu