மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தபோது
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வியாழக்கிழமை (இன்று) கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீரை குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம் ஆகும். இத்திட்டம், எளிதில் கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியது. மேலும், வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பொருள் குறித்தும், இது சம்பந்தமாக ஊக்குவிக்கும் பொருட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்காணும் பொருள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படம் திரையிடப்படவுள்ளது. அனைவரும் மழைநீரின் முக்கியத்துவத்தை அறிந்து மழைநீர் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக சம்பத்நகர் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் திண்டல் வேளாளர் கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டதை பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, மாவட்ட அட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (கிராம குடிநிர் திட்டம்) நிர்வாகப் பொறியாளர்கள் சிவகுமார், விநாயகம், உதவி நிர்வாகப் பொறியாளர் விஜய்குமார், துணை நிலநீர் வல்லுநர் துரைசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu