10 ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்.?. ஸ்டாலின் காட்டமாக கேள்வி

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்.?. ஸ்டாலின் காட்டமாக கேள்வி
X

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களத்தில் முதல்வர் ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர், 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? என்று காட்டமாக கேட்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காந்தி சிலை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்று பேசுகிறார். தயவு செய்து நான் அவரிடம் ஒன்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் 10 வருடம் அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. 2 முறை ஆட்சியில் இருந்துள்ளீர்கள். 10 வருடம் ஆட்சியில் இருந்தீர்களே.. அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? அதுதான் என்னுடைய கேள்வி. நாங்கள் செய்ததை புள்ளி விபரத்துடன் ஆதாரத்தோடு சொல்லி இருக்கிறேன். கண் தெரியவில்லை என்றால் கண்ணாடியாவது போட்டு படித்து பாருங்கள். என்ன செய்து இருக்கிறோம் என்று. நீங்கள் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்பதுதான் என்னுடைய வாதம். நீங்கள் உறுதிமொழி கொடுத்தீர்கள். இலவசமாக செல்போன் தருவோம் என்று சொன்னீர்கள். கொடுத்தீர்களா? யாருக்காவது கிடைத்ததா? ஆவின் பால் பாக்கெட் 25 ரூபாய்க்கு தருவோம் என்று சொன்னீர்கள். கொடுத்தீர்களா? அதுவும் கிடையாது. ஏழை மக்களுக்கு அம்மா பெயரில் அம்மா மினரல் வாட்டர் ஒவ்வொரு வீட்டுக்கும் தருவோம் என்று சொன்னீர்கள். கொடுத்தீர்களா? கிடையாது.

அதே மாதிரி அவசியமான மளிகை பொருட்களை குறைந்த விலையில் கொடுப்போம் என்று உறுதிமொழி கொடுத்தீர்கள். அதையாவது செய்தீர்களா? அதுவும் கிடையாது. வீடில்லா ஏழை மக்களுக்கு 3 செண்ட் இடம் தரப்படும் என்று சொன்னார்கள். கொடுத்து இருக்கிறீர்களா? அதுவும் கிடையாது. அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை தருவோம் என்று சொன்னீர்கள். அதுவும் தரவில்லை. கல்விக் கடன் எல்லாம் அடைத்துவிடுவோம் என்று சொன்னீர்கள். அதுவும் செய்யவில்லை. கோ ஆப் டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா?. பண்ணை மகளிர் குழுக்கள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். அதையாவது கொடுத்தார்களா? அதுவும் இல்லை. உறுதிமொழி கொடுத்ததையே நிறைவேற்ற முடியாத ஒரு ஆட்சி அதிமுக ஆட்சியாக இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது செய்துகொண்டு இருக்கிறோம்.

இதே மாநகராட்சிக்கு சற்று ஏறக்குறைய 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல பணிகள் நடந்து உள்ளது. மேலும் 400 கோடி ரூபாய் இந்த ஈரோடு மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு பல பணிகளுக்காக உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், உடனடியாக இடைத்தேர்தல் வந்த காரணத்தால் அந்த பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. தேர்தல் முடிந்தவுடன், சட்டமன்ற உறுப்பினராக உங்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஈவிகேஎஸ் இளங்கோவன், மூலமாக அந்த பணிகள் எல்லாம் வேகமாக நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியோடு சொல்கிறேன். நான் பல முறை சொல்லிவிட்டேன்.

நீங்களும் அதை படித்துவிட்டீர்கள். தொலைக்காட்சிகளிலும் பார்த்து இருப்பீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகாலத்தில் தேர்தல் நேரத்தில் சொன்ன 85 சதவீத உறுதிமொழிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் மிச்சம் இருப்பது 15 சதவீதம்தான். ஆனால், தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிகளை நிறைவேற்ற 5 நிமிடம்தான் டைம். 5 வருசம் கூட தேவையில்லை. இன்னும் 3 வருடத்தில் அத்தனையையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்