ஈரோட்டில் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி போட்டி பிரசாரம்

ஈரோட்டில் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி போட்டி பிரசாரம்
X

ஈரோட்டில் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வீதிவீதியாக சென்று போட்டி போட்டு பிரச்சாரம் செய்தனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அதிமுக), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), ஆனந்த் (தேமுதிக) உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தாலும் திமுகவினர் தான் அதிகம் பேர் அங்கேயே முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள், எம்பிக்கள்., எம்எல்ஏக்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மேயர்கள், வாரியத் தலைவர்கள், அணிகளின் நிர்வாகிகள், வட்ட பகுதி கழக செயலாளர்கள் என ஏராளமானோர் சென்று முகாமிட்டு கடந்த ஒரு மாதமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் (சனிக்கிழமை) தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீதிவீதியாக பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரசார வேனில் புறப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பஸ்நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். அதன் பிறகு கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று காந்தி சிலை அருகே பிரசார வேனை நிறுத்தி அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பேசினார்.

இதன்பிறகு பூம்புகார் நகர், காந்திநகர், வில்லரசம்பட்டி வழியாக அக்ரஹாரம் சென்று பிரசாரம் செய்தார். அத்துடன் காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 3 மணி அளவில் சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி வழியாக சென்று முனிசிபல் காலனி அருகே வேனில் இருந்தபடி பேசுகிறார். அதன்பிறகு மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக சென்று பெரியார் நகரில் பிரசாரம் செய்து 'கை' சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறார். அத்துடன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக் கொண்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து பின்னர் சென்னை புறப்படுகிறார்.

இதேபோல் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்றும் ஈரோடு தொகுதியில் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார். குருசாமி கவுண்டர் மண்டபத்தில் இருந்து பிரசாரத்தை அவர் துவக்கினார். வீரப்பம்பாளையம், பண்ணைக்காடு, கணபதி நகர் உட்பட பல்வேறு இடங்களில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி பெரியார் நகர் ஆர்ச் நால்ரோட்டில் பிரச்சாரத்தை முடிக்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் முகாமிடுவதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வாக்குப்பதிவு நாளை மறுநாள் திங்கட்கிழமை பிப்.27-ல் நடைபெறுவதால் வெளியூரில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவாக இன்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!