தடுப்பணையை காணவில்லை: ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்த பாஜகவினர்
தடுப்பணையை காணவில்லை என புகார் மனு கொடுக்க வந்த பாஜக கட்சியினர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தடுப்பணையை காணவில்லை என பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (22ம் தேதி) நடைபெற்றது. இதில், ஈரோடு பாஜக தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தம்பாளையம் பிரதமர் தத்தெடுப்பு சிறப்பு ஊராட்சியாகும். இங்கு 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த, 2021–22ல் அவரைக்காய் பள்ளம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டியதாக, அரசு ஆவணங்களில் உள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றோம்.
தடுப்பணை பணிக்கு பணத்தை அரசு விடுத்துள்ளது. ஆனால் தடுப்பணை மட்டும் அந்த இடத்தில் இல்லை. ஆவணத்தில் உள்ள இடத்தில் நேரிலும், கூகுள் மேப்பில் தேடியும் தடுப்பணை காணவில்லை. இப்பணிக்கு, மாநில அரசு ரூ.6.97 லட்சம், மத்திய அரசு ரூ.12.46 லட்சம், 100 நாள் வேலை திட்ட கூலி ரூ.2.56 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டி உள்ளனர்.
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், அங்குள்ள பள்ளி அருகே ஓடையோ, தண்ணீர் செல்லும் இடமோ, பள்ளமோ இல்லாத இடத்தில், 15 அடி நீளம், 3 அடி உயரத்துக்கு மதில் சுவரை காட்டி இதுதான் தடுப்பணை என்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி மக்களிடம் கொண்டு செல்ல திண்ணை பிரசாரம், விழிப்புணர்வு கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu