ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு விடிய விடிய பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு விடிய விடிய பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம்
X

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம் விநியோகத்தை வீடியோ பதிவு செய்த தனியார் தொலைக்காட்சி குழுவினரை தாக்கிய நபரை படத்தில் காணலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் விடிய, விடிய வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடக்கிறது. இதனால் 25-ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 24, 25-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அதே நாளில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் செய்கிறார். தற்போது பிரேமலதா விஜயகாந்த், சீமான் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதனிடையே வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து பணம் விநியோகம் செய்வது, சுற்றுலா அழைத்துச் செல்வது, தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குவது, அசைவ விருந்து வழங்குவது என பல முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பரிசுப் பொருள், பணம் வழங்கும் நடவடிக்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே வாக்காளர்களுக்கு குக்கர், வெள்ளி கொலுசு, பட்டுபுடவை, குடம், தட்டு போன்ற விதவிதமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் விநியோகம் செய்யும் வீடியோ பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

இதனிடையே தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில் குறியீடு இடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இரவு நேரங்களில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு ஒரு வாக்குக்கு இவ்வளவு என கணக்கிட்டு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவனத்தினர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர், நிலைக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இதனையும் மீறி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரமும், மற்றொரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரமும் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பணத்துடன் வேட்டி, சேலையும் விநியோகம் செய்துள்ளனர். சில இடங்களில் பரிசு பொருட்களும் வாரி வாரி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் தொடர்பாக வரும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story