சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய கார்..!
வாய்ப்பாடி ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய லாரி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்கப்பட்டது.
சென்னிமலை அருகே வாய்ப்பாடி ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய மழை நீரில் கார் மற்றும் லாரி மூழ்கிய நிலையில், லாரி ஜேசிபி மூலம் மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே விஜயமங்கலம் - சென்னிமலை சாலையில் வாய்ப்பாடி என்ற இடத்தில் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் அருகில் உள்ள பகுதியில் இருந்து மழை நீரும் இங்கு வந்து சேர்ந்தது. இதன் காரணமாக ரயில்வே நுழைவு பாலத்தில் 10 அடி உயரத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், கவுண்டம்பாளையத்தில் இருந்து சென்னிமலை நோக்கி அந்த வழியாக வந்த கார் ஒன்று இந்த ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக சென்றது. அப்போது அங்கு அதிகமாக தேங்கி நின்ற மழை நீரால் கார் பழுதாகி நின்றது. இதனையடுத்து, நீரின் அளவு அதிகமானதால் காரில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு வெளியே வந்து உயிர் தப்பினார். இதேபோல், அந்த வழியாக வந்த லாரியும் மழைநீரில் சிக்கி பழுதானது.
இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். பின்னர், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரியை மீட்டனர். தொடர்ந்து, நுழைவு பாலத்தின் நடுப்பகுதியில் 10 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், தற்போது மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. முழுமையாக தண்ணீர் வெளியேற்றிய பின்னரே மூழ்கிய காரை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu