ஈரோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 இளம் பெண்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 இளம் பெண்கள் உயிரிழப்பு
X

விபத்தில் நொறுங்கி கிடக்கும் காரை படத்தில் காணலாம்.

ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்தனர்.

ஈரோடு அருகே இன்று அதிகாலை வில்லரசம்பட்டியில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்தனர்.

ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 26). இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், இன்று அதிகாலை அவரது காரில் 2 இளம்பெண்களை ஏற்றிக்கொண்டு கோவை செல்வதற்காக நசியனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார், ஈரோடு வில்லரம்சம்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி சாலையோர புதரில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 2 இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய காரை கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த 2 இளம்பெண்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்த ஒரு பெண் அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த கணபதி மனைவி சவுந்தர்யா என்பது தெரியவந்தது. மற்றொருவர் கோவையைச் சேர்ந்த ரிச்வானா என தெரியவந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவர் பற்றிய முழு விவரம் தெரியவில்லை.

கலைச்செல்வனும், இரு இளம் பெண்களும் இன்ஸ்டா நண்பர்கள் என கூறப்படுகிறது. எனினும் விசாரணைக்கு பிறகு முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!