மக்களைத் தேடி மருத்துவம்: ஈரோடு மாவட்டத்தில் 3.59 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை

மக்களைத் தேடி மருத்துவம்: ஈரோடு மாவட்டத்தில் 3.59 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
X

Erode News- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.

Erode News- தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 443 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.

Erode News, Erode News Today- தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 443 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை கடந்த 2021 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இத்திட்டமானது, ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் முதலான நோய்கள் தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.


இதில், மாவட்டத்தில் 2021-2024 வரை 18,22,061 பரிசோதிக்கப்பட்டு அவற்றில் புதிதாக 3,05,946 இரத்தக்கொதிப்பு நோயாளிகள், 1,37,767 சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வலி நிவாரண சிகிச்சை 8,607 பயனாளிகள் மற்றும் இயன்முறை சிகிச்சை மூலமாக 26,160 பயனாளிகள் சிகிச்சை பெற்று தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் கருப்பை வாய் புற்று நோய் 1,16,238 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றில் புதிதாக 457 நோயாளிகளும், மார்பக புற்றுநோய் பரிசோதனையானது 2,43,205 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றில் 551 நோயாளிகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 4ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கினார்.


தொடர்ந்து , 16 மக்களைத் தேடி மருத்துவ வட்டார வாகன அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், இயன்முறை சிகிச்சை மற்றும் வலிநிவாரண சிகிச்சை அலுவலர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 48 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கினார்.

மேலும், 9 மருத்துவ குழுக்கள் மூலம் மருத்துவம் முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், நடமாடும் நம்பிக்கை மையத்தின் புதிய வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நாரணாவாரே மனிஷ் சங்கர்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) செந்தில்குமார், துணை இயக்குநர் (குடும்ப நலம்) கவிதா, மாநகர நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட திட்ட மேலாளர் துரைசாமி, மாவட்ட தொற்றாநோய் பிரிவு அலுவலர் சோமசுந்தரம் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது நல்ல இருக்கே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கு 8 வருஷம் வாரன்டியா !