சித்தோடு அருகே கார் மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழப்பு: ஈரோடு மாவட்ட கிரைம்..
சித்தோட்டில் இருசக்கர வாகனம்- கார் மோதிய விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நெருங்கி இருப்பதையும், பர்கூரில் கஞ்சா செடி வளர்த்து கைது செய்யப்பட்ட நாகராஜையும் படத்தில் காணலாம்.
சித்தோடு அருகே கோயிலுக்குச் சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அண்ணன், தங்கை சாவு
சித்தோடு அருகேயுள்ள நசியனூர், சாமிகவுண்டன்பாளையம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (எ) பூரணசாமி (58). இவர், நசியனூர் மாரியம்மன் கோயில், மதுர காளியம்மன் கோயில், கருப்பராயன் கன்னிமார் கோயில்களில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். முத்து வழக்கம்போல் நேற்று காலை கோவில்களில் பூஜை செய்துவிட்டு, அதே பகுதியில் வசிக்கும் தனது தங்கை புஷ்பா (49) வுடன், மோட்டார் சைக்கிளில் நசியனூர் மேற்கு புதூர் மாரியம்மன் கோயிலில் பூஜை செய்யச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சாமிகவுண்டன்பாளையம் பிரிவு அருகே கடக்க முயன்றபோது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட முத்து, புஷ்பா ஆகியோர் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் பிரேதங்களைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோயிலுக்குச் சென்று திரும்பியபோது ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அருகே கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தேகையூர் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவலின் பேரில், அக்கிராமத்தில் வசிக்கும் ஈரண்ணன் மகன் நாகராஜ் (28) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் 700 கிராம் எடை கொண்ட 3 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து(வயது 58). கூலி தொழிலாளி. இந்நிலையில், இவருக்கு தங்கமுத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவி உடன் கணவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு ருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தங்கமுத்து அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu