ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பா.ஜ.க. ஆதரவு
அண்ணாமலை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் தென்னரசுவுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வருகிற 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. வேட்பாளராக பல்வேறு பஞ்சாயத்துக்கு பின்னர் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் இன்று தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்து உள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க .வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும், கே.எஸ்.தென்னரசுக்கு பாரதிய ஜனதா கட்சி, தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டபூர்வ அ.தி.மு.க. வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளும் தி.மு.க. அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும். நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம் என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன் நாம் மனதார உழைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu