பைக் மோதி எஸ்.ஐ., கால் முறிவு; 2 இளைஞர்கள் கைது: ஈரோடு மாவட்ட கிரைம்..

பைக் மோதி எஸ்.ஐ., கால் முறிவு; 2 இளைஞர்கள் கைது: ஈரோடு மாவட்ட கிரைம்..
X

பைல் படம்

பைக் மோதி எஸ்.ஐ கால் முறிவு 2 வாலிபர்கள் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்.

பைக் மோதி எஸ்.ஐ கால் முறிவு 2 வாலிபர்கள் கைது:

ஈரோடு கருங்கல்பாளையம் செக்போஸ்டில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து வந்த பைக்கை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் பைக் நிற்காமல் அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ.முத்துகிருஷ்ணன் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த 2 பேர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனர். பைக் மோதியதில் எஸ்.ஐ முத்துகிருஷ்ணனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பைக்கில் வந்து மோதியவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கமலேஷ் (22), ஈரோடு கருங்கல் பாளையத்தை சேர்ந்த ராகவன் (20) என்பதும், இருவரும் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மது விற்ற 3 பேர் கைது:

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சிறுவலூர் போலீசார் நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொளப்பலூர் காமராஜ் நகர், டாஸ் மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த சோலை(42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பங்களாபுதூர் போலீ சார் நடத்திய சோதனையில் டி.ஜி.புதூர் சந்தை அருகில் மது விற்றதாக குள்ளநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (36), டி.ஜி.புதூர் டாஸ்மாக்கடை அருகே மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

எலிபேஸ்ட் தின்று முதியவர் தற்கொலை:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர் பொம்மன்பட்டி பதுவலசை சேர்ந்தவர் லோகநாதன் (70). இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடலிறக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவ்வப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தீவிர வலி காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லோகநாதன் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

இது குறித்து அவரது மகன் சுப்ரமணியம் கேட்டபோது வயிற்று வலி பொறுக்க முடியாததால் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்ட்டை தின்று விட்டதாக கூறி உள்ளார்.பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லோகநாதன் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story