பர்கூர் பகுதியில் மீண்டும் நூறு நாள் வேலை: தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம், பர்கூர் பகுதியில் மீண்டும் நூறு வேலை வழங்கும் திட்டம் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
HIGHLIGHTS

பைல் படம்
பர்கூர் மலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, 100 நாள் வேலை திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கியதால், தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கிராமப்புற ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களுக்கு, விவசாயப் பணிகள் நீங்கலாக குறைந்த பட்சம், 100 நாள் வேலை வழங்கும் நோக்கத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வேலைக்காக தினசரி கூலி, 294 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, வேலை, நேரம், வேலையின் அளவுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும்.
அந்தியூர் யூனியன் பர்கூர் பஞ்சாயத்தில், 3 கிராமங்கள் தவிர, பெரும்பாலான கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு ஆண்டு கணக்கில் வேலை வழங்காமல் இழுத்தடித்ததாகவும், பர்கூர் ஊராட்சியில் கொங்காடை, அக்னிபாவி, தாளக்கரை, தேவர்மலை, துருசனாம்பாளையம், சோளகணை உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கானோர் வேலை இன்றி பாதிக்கப்பட்டனர்.
இதுபற்றி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும், பணி வழங்கவில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதுபற்றி விசாரித்து பணி வழங்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதுபற்றி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: பர்கூர் ஊராட்சிக்குள்பட்ட துருசனாம்பாளையம் உட்பட, 4 கிராமங்களில் நேற்று முதல், 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. 17 கிராமங்களை சேர்ந்த, 481 பேர் வேலை கேட்டு மனு வழங்கினர்.
முதற்கட்டமாக, துருசனாம்பாளையத்தில், 46 பேர், பர்கூரில், 6 பேர், ஆலணையில், 19 பேர் என, 4 கிராமங்களில், 78 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றார். நீண்ட நாட்களுக்கு பின் நேற்று, 100 நாள் வேலை திட்டப்பணி மீண்டும் கிடைத்ததால் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.