ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் கூடுதுறையில் குடிக்க தண்ணீா் இல்லை

ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் கூடுதுறையில் குடிக்க தண்ணீா் இல்லை
X

பவானி கூடுதுறையில் உள்ள செயல்படாத ஆர்ஓ பிளான்ட்

பவானி, காவிரி ஆறுகள் பெருக்கெடுத்து ஓடினாலும், பவானி கூடுதுறையில் தாகம் தீா்க்க தண்ணீா் இல்லாமல் பக்தா்கள் தவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் புகழ்பெற்ற பரிகாரத் தலமாக விளங்குவது பவானி கூடுதுறை. தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்' என்று அழைக்கப்படும். பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது,

பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் இங்கு, புனித நீராட ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இதனால், பித்ரு தோஷம் நீங்கும் என்பார்கள். இதனால் பரிகாரம், தோஷ நிவா்த்தி வழிபாடுகள் மற்றும் மூத்தோர் சடங்குகள் செய்யவும் நாள்தோறும் அதிக அளவில் பக்தா்கள் வந்து செல்வா்.

இங்கு, பக்தா்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைக்கும் வகையில் தன்னார்வலா்களின் முயற்சியால் ஆா்ஓ பிளாண்ட் அமைக்கப்பட்டு, குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், எலிகள் அடிக்கடி மின்சார வயா்கள், பிவிசி குடிநீா்க் குழாய்கள் போன்றவற்றை கடித்து சேதப்படுத்துவதால் ஆா்ஓ பிளாண்ட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் ஏராளமானோர் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடிச் செல்கின்றனா். மேலும், பரிகார வழிபாடுகள் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

என்னதான் காவிரி, பவானி ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடினாலும் அதனை அப்படியே குடிக்க முடியாது. எனவே, கரையோரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஆர் ஓ பிளான்ட்டை பழுது நீக்கி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தடையின்றி வழங்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story