ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது; அண்ணாமலை
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜி 20 தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வந்துள்ளது. இதை குறிக்கும் விதமாக 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். பாரதீய ஜனதா அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது. வெகு விரைவில் இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும்.
ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க அண்ணா திமுக அழைப்பு விடுத்துள்ளது. நான் இலங்கை செல்வதால் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். எல்லோரும் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள். அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நானும் பிரச்சாரம் மேற்கொள்வேன்.
கூட்டணி தர்மத்தின்படி கூட்டணி சார்பில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற வைக்க வேண்டியது நமது கடமை. இது ஒரு சாதாரண இடைத்தேர்தல். தி.மு.க.வினர் அனைவரும் ஈரோடு கிழக்கில் தான் உள்ளனர். தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் 2 நாள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இடைத்தேர்தலுக்கு முதல்வர், இத்தனை அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆளும் கட்சி இந்த அளவுக்கு இடைத்தேர்தலை பயத்துடன் எதிர்கொண்டதாக சரித்திரம் இல்லை.
இடைத்தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது தமிழக வரலாற்றில் நடைபெற்றது கிடையாது. தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது. தி.மு.க. வேட்பாளர் பேசினாலே எங்கள் பக்கம் தானாக வாக்குகள் வந்து சேர்ந்துவிடும்." இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu