சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தையுடன் மருத்துவ உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார்.
சத்தியமங்கலம் அருகே பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தராஜ் (வயது 35). இவருடைய மனைவி குப்புலட்சுமி (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. பின்னர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆம்புலன்சை ஓட்டுநர் ராஜ்குமார் என்பவர் ஓட்டினார்.
இந்த நிலையில், கே.என்.பாளையம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது குப்புலட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால், ஓட்டுநர் ஆம்புலன்சை நிறுத்தினார். அதன்பின்னர் குப்புலட்சுமிக்கு ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் கார்த்திகேயன் பிரசவம் பார்த்தார். இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கு தாயும், சேயும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.
சாதுரியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜ்குமார் மற்றும் மருத்துவ உதவியாளர் கார்த்திகேயனுக்கு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu