ஆயுதபூஜை விடுமுறை நிறைவு: ஈரோடு ரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம்

ஆயுதபூஜை விடுமுறை நிறைவு: ஈரோடு ரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம்
X

ஈரோடு ரயில் நிலையத்தில் அலைமோதிய  பயணிகள் கூட்டம்.

ஆயுதபூஜை விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமானோர் புறப்பட்டு சென்றதால் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஆயுதபூஜை பண்டிகைக்கான விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றதால் ஈரோடு ரயில், பேருந்து நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.

ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக விடுமுறையை கழிப்பதற்காக வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈரோடு மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தொலை தூரம் செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில், விடுமுறை முடிந்து நாளை (14ம் தேதி) திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் இன்று (13ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

குறிப்பாக, ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறைக்கு வெளியூரிலிருந்து ஈரோட்டுக்கு வந்த மக்கள் மீண்டும் வெளியூர் செல்ல வேண்டி இன்று அதிகாலை முதல் ரெயில் நிலையத்திற்கு வரத் தொடங்கினர். முன்பதிவு பெட்டிகள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது.

ரயிலில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடி இடம் பிடித்தனர். இதேபோல் விடுமுறைக்கு வெளியூருக்கு சென்றிருந்த பொதுமக்களும் இன்று ஈரோட்டுக்கு திரும்பினர். ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல், பேருந்து நிலையத்திலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!