நல்லாம்பட்டி பள்ளியில் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்..!

நல்லாம்பட்டி பள்ளியில் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்..!
X

நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமின் போது எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று (25ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரம் பெத்தாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு, டெங்கு தடுப்பு, பாதுகாப்பான குடிநீர் அவசியம் குறித்து சுகாதார விழிப்புணர்வு முகாம் இன்று (25ம் தேதி) நடைபெற்றது.


இந்த முகாமிற்கு, ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். இதில், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் மரண விகிதங்கள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை, இளம் வயது திருமணத்தால் தடைப்படும் பெண்கல்வி, இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவகால தாய் சேய் மரணங்கள், குறை பிரசவங்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை பிறத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, பெண்களின் உடல்நலம் மற்றும் சமுதாய சீர்கேடுகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம் அதனால் தடுக்கப்படும் நோய்கள், குடிநீர் சேமித்து வைக்கும் மேல்நிலை தொட்டிகள், தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டியதின் அவசியம், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் நன்மைகள், வயிற்றுப்போக்கு நோய் ஏற்படுவதற்கான காரணிகள், அதற்கான தடுப்பு முறைகள், கை கழுவுவதின் அவசியம், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர் கோகுல் வசந்த், தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 200 பேர்கள் கலந்து கொண்டனர். இறுதியில், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு