ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக ஆற்றல் அசோக்குமார் பிரச்சாரம்
ஈரோடு கிழக்குத் தொகுதி பெரியார்நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆற்றல் அசோக்குமார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த தேர்தல் ஆணையம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மறைந்த ஈவெரா திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இரட்டை இலை சின்னத்தில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி 45வது வார்டு பெரியார் நகரில் எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பெரியார் நகரில் வசிக்கும் பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு செய்யப்பட்ட பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் தெளிவானவர்கள். பொய்யான வாக்குறுதிகளை புறம் தள்ளி, அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பெரியார் நகர் முழுவதும் ஆற்றல் அசோக்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu