ஈரோடு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஈரோடு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது
X

சலீம்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி காமாட்சி அம்மன் லைன் கீரைக்கார வீதியைச் சேர்ந்தவர் முகமது மகன் சலீம் (வயது 37). பூ கடையில் மாலை கட்டும் வேலைக்குச் சென்று வரும் இவருக்கு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகளைத் தனக்கு தெரியும் எனவும், மண்டலம் 2-ல் வரி வசூல் மைய உதவி அலுவலர் பணியைப் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி, பவானி மேற்குத் தெரு, மண் தொழிலாளர் 3-வது வீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சரஸ்வதி ரூ.4.10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு பிப்.19-ம் தேதி முதல் மார்ச்.23-ம் தேதி வரையில் பல தவணைகளாக பணத்தைப் பெற்றுக் கொண்ட சலீம், மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பலமுறை கேட்டும் எவ்வித பதிலும் இல்லை. வேலையும் வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, தனக்கு வேலை வேண்டாம், பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டதற்கு சலீம் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பவானி போலீசில் சரஸ்வதி புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சலீமைத் தேடி வந்தனர். இந்நிலையில், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீசார், சலீமைக் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!