ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்க வேண்டுகோள்
கிறிஸ்தவ தேவாலயம் (மாதிரிப் படம்).
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (1ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் (ம) அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம்.
தேவாலய கட்டடங்கள் 10 - 15 ஆண்டுகள் இருந்தால் மானிய தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், 15 - 20 ஆண்டுகள் இருந்தால் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் மானிய தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (புதிய கட்டடம், 4 -ஆம் தளம்) அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 0424-2260155 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu