அந்தியூர் அருகே வேட்டை தடுப்பு காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

அந்தியூர் அருகே வேட்டை தடுப்பு காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
X

வேட்டை தடுப்பு காவலர் பிரசாந்த்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வேட்டை தடுப்பு காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அந்தியூர் அருகே வேட்டை தடுப்பு காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் பிரசாந்த் (22). இவர் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்தில் கடந்த 1 வருடமாக தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு சுமார் 7 மணியளவில் வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சனிச்சந்தைப் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது வீட்டில் பாம்பு இருப்பதாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் வந்தது. வனச்சரகர் ராஜா உத்தரவின் பேரில், வேட்டை தடுப்பு காவலர்கள் நாகராஜ், கணேஷ்குமார், பிரசாந்த் ஆகிய மூவரும் பாம்பு பிடிக்க சென்றனர். அப்போது திடீரென பிரசாந்த் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக சக வேட்டை தடுப்பு காவலர்கள் அவரை மீட்டு பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையறிந்த பிரசாந்த் உறவினர்கள் அவர் பாம்பு கடித்துதான் இறந்து விட்டதாகவும், அவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!