அந்தியூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவருக்கு சிறை

அந்தியூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவருக்கு சிறை
X
அந்தியூர் அருகே சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, இருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் பிரபாகரன், வயது 40.பஸ் மெக்கானிக். இவர், ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியலின வகுப்பை சேர்ந்த இவருக்கும், வேறு சமுதாயத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம், தவிட்டுப்பாளையம் அத்தாணி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில், பிரபாகரனும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் காந்தி நகரை சேர்ந்த வெங்கிடுசாமி மகன் சுரேஷ் 29, முனியப்பன்பாளையம் சின்னநாய்க்கர் மகன் ஜெயக்குமார் 27 ஆகியோர், பிரபாகரனிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். லாரி ஏற்றி கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தும், சாதிப்பெயரைச் சொல்லி இருவரும், பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன், அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture