அம்மாபேட்டையில் சூறாவளிக்காற்றுடன் மழை: வாழை- கரும்பு பயிர்கள் சேதம்

அம்மாபேட்டையில் சூறாவளிக்காற்றுடன் மழை: வாழை- கரும்பு பயிர்கள் சேதம்
X

மழை, சூறாவளிக் காற்றில் சேதமடைந்த வாழை.

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் ஆயிரக்கணக்கான வாழைகள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அம்மாபேட்டையை அடுத்த ஆனந்தம்பாளையத்தில் பவானி- மேட்டூர் ரோட்டில் உள்ள மரம் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மழை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இரவில் வீசிய தொடர் சூறாவளிக்காற்றால் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, சனி சந்தை, சென்னம்பட்டி, ஜரத்தல், கொமராயனூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.

இதேபோல் சிங்கம்பேட்டை, சொட்டையனூர், ஆட்டக்காலனூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்களும் சாய்ந்து நாசமாயின. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து நாசம் ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வாழைகள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்ததால், அதுபற்றிய சேதமதிப்பு குறித்து அந்தந்த பகுதி நில வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், அம்மாபேட்டை ஆரம்ப துணை சுகாதார நிலைய குடியிருப்பின் மீது, 2 பெரிய மரங்கள் சாய்ந்து விழுந்ததால் அங்கிருந்த கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Tags

Next Story