அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு
அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்போடு, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோயில், சென்றாயப் பெருமாள் திருக்கோயில் மற்றும் கரிய காளியம்மன் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த திருக்கோயில்களாகும். இக்கோயிலுக்கு சொந்தமாக சுமார் 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 10 ஏக்கர் நிலங்களை, இப்பகுதியில் உள்ள ஆறு பேர் ஆக்கிரமிப்பு செய்து, தங்களது பெயரில் பட்டா மாறுதல் செய்து பயன்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலைத்துறை சார்பில், ஆறு பேர் மீது நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் நான்கு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் 10 ஏக்கர் நிலங்களை, திருக்கோயில் நிர்வாகம் சுவாதீனம் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலையில், காவல்துறையினர் பாதுகாப்போடு, கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தில், திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலகையும் வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu