அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பாதையில் மண்சரிவு: போக்குவரத்து கடும் பாதிப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் நெடுஞ்சாலை இந்த மலைப்பாதை வழியாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் எப்போதும் போக்குவரத்து நடைபெற்று கொண்டே இருக்கும்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பர்கூர் மலைப்பகுதியில் கனமழை விடாமல் பெய்தது. இதனால் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் நடுரோட்டுக்கு உருண்டு வந்தன. பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தன. இதனால் மைசூருவில் இருந்து அந்தியூர் நோக்கி வந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 11 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தாசில்தார் விஜயகுமார், வனச்சரகர் உத்தரசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.
ரோட்டில் விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மரங்கள் வெட்டி ரோட்டு ஓரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அகற்ற முடியாத அளவில் இருந்த ராட்சத பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
மதியம் 12 மணி வரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன. அதன்பின்னர் கார், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரமுடிந்தது.
மலைப்பாதையை சீரமைக்கும் பணிகள் நேற்று மாலை வரை தொடர்ந்து நடந்ததால் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டபோது அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அந்த இடத்தில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அந்தியூரில் இருந்து மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பர்கூர் மலைகிராமங்களுக்கு மின்வினியோகம் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu