பர்கூர் மலைப்பகுதியில் இன்று மீண்டும் மண்சரிவு

பர்கூர் மலைப்பகுதியில் இன்று மீண்டும் மண்சரிவு
X

சரிவு ஏற்பட்ட மலைப்பாதை.

பர்கூர் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பாதையில் செட்டிநொடி என்ற இடத்தில் சாலை விரிசல் ஏற்பட்டதின் காரணமாக, வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தொடங்கும் மலைப்பாதையில், தாமரைக்கரை செல்லும் வழியில் உள்ள செட்டிநொடி என்ற இடத்தில் நேற்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மலைப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் ராட்சத பாறைகள் சாலையில் விழுந்ததால், சாலையின் மற்றொரு பகுதி சேதமடைந்தது. சம்பவ இடத்தில் முகாமிட்ட அந்தியூர் நெடுஞ்சாலைத்துறையினர், ராட்சத பாறைகளை வெடி வைத்து தகர்த்து, நேற்று மாலை ஆறு மணிக்கு வாகன போக்குவரத்து செல்ல பாதையை சீரமைத்தனர்.இதன் காரணமாக, இரண்டு சக்கர வாகனங்களும், இலகு ரக வாகனங்களும் மலைப் பாதையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை, மண் சரிவு ஏற்பட்ட அதே பகுதியில் சாலையின் குறுக்கே விரிசலடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அபாயகரமாக காட்சியளிக்கிறது.மேலும், தார்சாலையின் கீழ்பகுதியில் உள்ள மண், மலை சரிவில் சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இதனால், சாலையின் அடிப்பகுதி மேலும் மேலும் பலவீனமடைந்து வருகிறது.இதன் காரணமாக, இன்று காலை, பர்கூரிலிருந்து அந்தியூர் வரும் வாகனங்களும், அந்தியூரிலிருந்து பர்கூர் செல்லும் வாகனங்களும் அவ்வழியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும், அந்தியூர் நெடுஞ்சாலைத்துறையினர் அந்தியூரிலிருந்து மண் மூட்டைகள் கொண்டு சென்று சீரமைக்கும் பணிகளை துவங்கியுள்ளனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!