அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறி நகைகள் கொள்ளை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வெள்ளித்திருப்பூர், ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது மனைவி சரஸ்வதி மற்றும் மகன் கிருஷ்ணராஜ் ஆகியோருடன், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் என்று கூறிக்கொண்டு, கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் வந்துள்ளதாகவும், கடையை சோதனையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மளிகைக்கடையில் மேற்கொண்ட சோதனையில் எதுவும் கிடைக்காத நிலையில், வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறி, வீட்டை சோதனையிட வேண்டுமென்று கூறியுள்ளார். இதையடுத்து, கடைக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டின் அனைத்து பகுதிகளிலும், அந்த நபர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பீரோவில் இருந்த 6 ½ சவரன் மதிப்புள்ள தங்க நகைகளை யாருக்கும் தெரியாமல் லாவமாக திருடி உள்ளார். பின்னர், சோதனையில் எதுவும் இல்லை; மீண்டும் வருவேன் என்றும் அதிகார தோரணையில் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.
அந்தநபர் வெளியேறிச் சென்றதற்குப் பிறகுதான், பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றது ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. இது குறித்து, வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்தில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். அரசு அலுவலர் என்று கூறி வீட்டில் தங்க நகையைத் திருடிச் சென்ற மர்மநபரை, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu