கூட்டுறவு வார விழாவில் 258 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை

கூட்டுறவு வார விழாவில் 258 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
X

முகாமில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ  ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூர் செல்லப்பகவுண்டன்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.

அனைத்திந்திய 68-வது கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு செல்லப்பகவுண்டன்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால் நடை சிகிச்சை முகாம் நடந்தது. விழாவில் துணைப் பதிவாளர் (பால்வளம்) ஈரோடு ராஜராஜன் தலைமை தாங்கினார் இதில் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: செல்லப்பகவுண்டன்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் வேம்பத்தி, செல்லப்ப கவுண்டன்வலசு, தாளக் குட்டைப்புதூர், ஓசைப்பட்டி, தோட்டக்குடியான் பாளையம், முனியப்பன்கோவில், வே.வெள்ளாளபாளையம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக பாடுபட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தினமும் உறுப்பினர்களிடம் இருந்து 2 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோடு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.

முகாமில் கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம், சினைப்பார்த்தல், கோமாரி நோய் தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத் தன்மை கண்டறியப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்கோ நிறுவனம் சார் மருந்துகள் வழங்கப்படுகிறது. வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் ஈரோடு ஆவின் துணைப்பொதுமேலாளர் சொர்ணகுமார் சிறப்புரை ஆற்றினார். ஈரோடு ஆவின் கால்நடை மருத்துவர்கள் எஸ்.சண்முகம். தினேஷ் குமார், சவுந்தரபாண்டியன், மோகன்ராஜ் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு 258-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தனர். முன்னதாக செல்லப்ப கவுண்டன்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கராசு வரவேற்றார். முடிவில் செயலாளர் மகேஷ் குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!