அந்தியூர் அருகே ஓடையில் வெள்ளப்பெருக்கு: மேம்பாலம் அமைக்க கோரிக்கை

அந்தியூர் அருகே ஓடையில் வெள்ளப்பெருக்கு: மேம்பாலம் அமைக்க கோரிக்கை
X

வெள்ளப்பெருக்கில் ஓடையை கடந்து செல்லும் மலை கிராம மக்கள்.

அந்தியூர் அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மலை கிராம மக்கள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராப்பாளையம் ஊராட்சியில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது, காக்காயனூர் பழங்குடியினர் மலை கிராமம். இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் கால்நடை மேய்ப்பதும், வளர்ப்பதுமாகும். வனப்பகுதி எல்லையான வட்டக்காட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் உள்ளே வனப்பகுதியில் வசித்து வரும் இவர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு இப்பகுதியில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்தியூருக்கு தினமும் வந்து செல்வார்கள்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் காக்காயனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் கரைபுரண்டு செல்கிறது. இதனால் காக்காயனூர் பழங்குடியின மக்கள் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும், காக்காயனூர் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களும் , சமையலர்களும் மிகுந்த சிரமத்திற்ககு ஆளாகியுள்ளனர். மேலும் சாலை பழுதடைந்துள்ளதால் கிராமத்திற்கு சென்று வந்த போக்குவரத்து சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேறும் பட்சத்தில், காக்காயனூர் இடையிலான ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை உருவாகும். எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!