அரசு பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்

அரசு பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்
X

வகுப்பறையில் உள்ள மதுபாட்டில்கள். 

அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளையும் திருடிச் சென்றார்கள்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. குறிச்சி பள்ளிக்கூடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனால் விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சீட்டு ஆடுவது, மது அருந்துவது என பல்வேறு தகாத சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். 10-ம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உள்ளே மாணவர்களின் மேஜை நடுவில் மதுபாட்டில்கள் கிடந்தன. மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு மது அருந்த குறிச்சி பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளார்கள். அதன்பின்னர் வளாகத்தில் இருந்து ஒரு மரத்தின் வழியாக மாடி ஏறி, 10-ம் வகுப்பறையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பாரில் இருப்பது போல் கொண்டாட்டமாக மது அருந்தி உள்ளார்கள். நள்ளிரவு செல்லும்போது வகுப்பறையில் இருந்து 2 பிளாஸ்டிக் நாற்காலிகளையும் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆசிரியர்கள் உடனே அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார்கள். அப்போது ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் போலீசாரிடம் பள்ளி வளாகத்தில் அடிக்கடி இதுபோல் நடக்கிறது. இப்போது எல்லை மீறி வகுப்பறையின் பூட்டை உடைத்தே உள்ளே வந்து மது அருந்தி சென்றிருக்கிறார்கள். அவர்களை உடனே பிடித்து தண்டிக்க வேண்டும் என்றார்கள்.

Tags

Next Story
ai based healthcare startups in india