முருகன் படத்துடன் பீடி: அந்தியூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார்

முருகன் படத்துடன் பீடி: அந்தியூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார்
X

அந்தியூர் காவல் நிலையத்தில் திரண்ட இந்து முன்னணியினர்.

முருகன் படத்துடன் வெளிவரும் பீடி கம்பெனியை முடக்க வேண்டும் என அந்தியூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த அப்துல் கரீம் என்பவர். இவர் நம்பர் 6 முருகன் பீடி என்ற பெயரில் பீடி கம்பனியை தொடங்கி நடத்தி வருகிறார். பீடி கம்பனி விளம்பரத்தில், ராஜா அலங்காரத்துடன் முருகன் நடுவிலும், இரண்டு பக்கத்தில் மயில்களின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், இந்து மத கடவுளான முருகனை அச்சிட்டு திட்டமிட்டு இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட, அப்துல்கரீம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று இந்து முன்னணியினர் சார்பில் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில், இன்று இரவு இந்து முன்னணியினர் திடீரென ஒன்று திரண்டு அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்றனர். காவல் நிலையத்தில் இருந்த பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்திலிடம், முருகன் படத்தை பீடி விளம்பரத்தில் அச்சிட்டு, கொச்சைப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பீடி கம்பெனியை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கைக்கு, இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி கார்த்திகேயன் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, இந்து முன்னணியினர் அந்தியூர் காவல் நிலையத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!