அந்தியூரில் இரண்டு மணி நேரம் பலத்த மழை: வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்

அந்தியூரில்  இரண்டு மணி நேரம் பலத்த மழை:  வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்
X

அந்தியூர் அருகே  ஈரெட்டியில் உள்ள காட்டாற்று தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்றது

அந்தியூர் எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் நீரோடைக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஈரெட்டி, மின்தாங்கி மற்றும் வழுக்குப்பாறை பகுதியில் நேற்று மாலை 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது.

பலத்தமழை காரணமாக ஈரெட்டியில் உள்ள காட்டாற்று தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்றது. இதனால் மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வெள்ளம் வடியும் வரை காத்திருந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு சென்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.அதுமட்டுமின்றி மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் எண்ணமங்கலம் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்தன.

மேலும், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைகரை, கொங்காடை, தாளக்கரை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழைநீரானது வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியான வரட்டுப்பள்ளம், கள்ளுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம் வழியாக வரட்டுப்பள்ளம் அணையை சென்றடைந்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நீரோடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்

Tags

Next Story
ai robotics and the future of jobs