அந்தியூரில் வீசிய சூறாவளிகாற்று : 3 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை சேதம்

அந்தியூர் மற்றும் அத்தாணி சுற்று வட்டார பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் மற்றும் கூரைவீடுகள் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக அந்தியூர் அருகே உள்ள அதாணி, எண்ணமங்கலம், மந்தை, ராசாகுளம், மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கதளி, செவ்வாழை ,மொந்தன் நேந்திரன் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

மேலும் கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதனால் தங்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் ஆலாம்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீட்டின் மேற்கூரைகள் சூறாவளி காற்றால் தூக்கி வீசப்பட்டுள்ளன. மேலும் மின்சார கம்பி மீது மரங்கள் முறிந்து விழுந்ததால், நேற்று இரவு முதலே அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சரிபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
future of ai in retail